பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று சாதனை சொந்த ஊரில் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு: ஊர்வலமாக அழைத்துச் சென்று மரியாதை

காடையாம்பட்டி: பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பனுக்கு சொந்த ஊரில், கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் மாரியப்பன். இவர் கடந்த 2018ல் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில், வெள்ளிப்பதக்கம் வென்றார். நேற்று மாலை, தனது சொந்த கிராமமான பெரியவடகம்பட்டிக்கு மாரியப்பன் வந்தார். அவரை காடையாம்பட்டி அருகே உள்ள தீவட்டிப்பட்டியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்எல்ஏ மற்றும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர். அப்போது, மாரியப்பன் திறந்த ஜீப்பில் தீவட்டிப்பட்டியில் இருந்து பெரியவடகம்பட்டி வரை, சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக மாரியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வாழ்த்துக்கள் காரணமாக, விளையாட்டில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் உதவ, சேலத்தில் அகாடமி ஆரம்பிக்க முடிவு செய்துள்ளேன். மீண்டும் நான் தங்கம் வெல்வேன் என்றார்.

Related Stories: