மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடிதம் தமிழகத்தில் இருந்து நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன்

சென்னை:  தமிழ்நாட்டின் மீது ஒரு பெரிய மரியாதை உள்ளதாகவும், தமிழகத்தில் இருந்து நிறைய அனுபவம் பெற்றிருப்பதாகவும்  தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் நிரந்தர கவர்னராக பன்வாரிலால் புரோகித்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இதேபோல், தமிழகத்தின் புதிய கவர்னராக நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று எழுதிய கடிதம்:  தமிழ்நாட்டில் 4 வருடங்கள் கவர்னராக பணியாற்றியுள்ளேன். தற்போது பஞ்சாப்பில் எனக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என் மனதில், தமிழ்நாட்டின் மீது ஒரு பெரிய மரியாதை உள்ளது. தமிழக மக்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள். அரசியலில் உள்ளவர்கள் சிறந்த மரியாதையுடன், முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளார்கள். தமிழக மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாக வாழ்கிறார்கள். தமிழர்களின் வாழ்க்கை முறையில் நான் நிறைய அனுபவங்களை பெற்றிருக்கிறேன்.

அதற்காக நான் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் பெரிய தேர்தல் களமாக இருப்பதை பார்த்தேன். அரசியல் நாகரீகம் நன்றாக உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக இருந்து உயர்கல்வியில் பெரிய ஆர்வம் கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தேன். அனைத்து தரப்பில் இருந்தும் முழு ஒத்துழைப்பை பெற்றிருக்கிறேன். தமிழ்நாட்டின் பண்பாடு, மதம், பாரம்பரியத்தை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது. ராஜ்பவனில் ஒரு பெரிய குடும்பமாக இருந்து எனக்கு ஒத்துழைப்பு தந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன். இவ்வாறு கூறியுள்ளார்.

* சங்கராச்சாரியாருடன் கவர்னர் சந்திப்பு

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்னும் சில தினங்களில் பஞ்சாப் மாநில கவர்னராக பதவி ஏற்க உள்ளார். இதனை முன்னிட்டு, நேற்று காஞ்சிபுரம் வருகை தந்த கவர்னரை காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை நேரில் சந்தித்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட கவர்னர், பின்னர் விஜயேந்திரரை 10 நிமிடம் தனிமையில் சந்தித்துபேசினார். இதன் பின் தமிழக கவர்னர் சங்கர மடம் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார்.

Related Stories: