ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை வைத்து திருநெல்வேலியில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ‘‘ஆதிச்சநல்லூர்,சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வின்போது கிடைத்த, அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும்  விதமாக, திருநெல்வேலி நகரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.இது  ‘பொருநை அருங்காட்சியகம்’ என  அழைக்கப்படும்’’ என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:  

* கீழடியில் சூரியன், நிலவு மற்றும் வடிவியல் குறியீடுகள் கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த தலைசிறந்த நாணயவியல் அறிஞரும், கொல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுஷ்மிதா பாசு மசும்தார், இந்த வெள்ளிமுத்திரைக் காசு, கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு, அதாவது, மௌரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.  

* கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களின் காலம், கி.மு.ஆறாம் நூற்றாண்டு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை வலுப்படுத்தும் விதமாக, தற்போது பெறப்பட்ட இரண்டு கரிம மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளிலும், கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது எனத் தெரியவந்துள்ளது.

* கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கருப்பு வண்ணப்பூச்சு பெற்ற கங்கைச் சமவெளியைச் சார்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றைக் கவனமாக ஆய்வு செய்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் முனைவர் ராகேஷ் திவாரி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரநாத் சிங் ஆகியோர், கொற்கைத் துறைமுகமானது கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே வெளிநாடுகளுடனும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

* ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளைப் பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மயாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப்புகழ் பெற்ற Beta Analytical Laboratoryக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் கிடைத்துள்ளன. AMS Carbon Dating முறையில் ஆய்வு செய்ததில், முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம்  கி.மு. 1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது. ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக,  திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு  அருங்காட்சியகம் அமைக்கப்படும்.  இது ‘பொருநை அருங்காட்சியகம்’ என அழைக்கப்படும்.

இதுமட்டுமல்ல; தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியத் துணைக்கண்டமெங்கும்; அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும்; தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய  அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். முதற்கட்டமாக, சங்ககாலத் துறைமுகமான முசிறி, தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரள  மாநிலத்தில் அமைந்துள்ளது. சேரநாட்டின் தொன்மையினையும், பண்பாட்டினையும்  அறிந்துகொள்ளும் வகையில், கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். அதேபோல், ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அன்றைய ரோமப் பேரரசின் ஒருபகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, மேலும்  ஓமன் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதிசெய்யும் வகையில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களோடு இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டுத் தொல்லியல் வல்லுநர்கள் துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் வழிநின்று நிறுவுவதே நமது அரசினுடைய தலையாய கடமை.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து வேல்முருகன்(தவாக), ஈஸ்வரன்(கொநாமதேக), ஜவாஹிருல்லா(மமக), டாக்டர் சதன் திருமலைக்குமார்(மதிமுக), டி.ராமச்சந்திரன்(இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி(மார்க்சிஸ்ட்), முகமது  ஷாநவாஸ்(விசிக), டாக்டர் சி.சரஸ்வதி(பாஜ), ஜி.கே.மணி(பாமக), செல்வபெருந்தகை(காங்கிரஸ்), அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், தங்கம்  தென்னரசு, துரைமுருகன் ஆகியோர் பேசினர். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்.

Related Stories: