நீட் தேர்வு மையங்களை மாற்ற கோரிய மனு தள்ளுபடி சுலபமாக விமானத்தில் போகலாமே... மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: நீட் மருத்துவ முதுநிலை நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள், தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட மனுவின் மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் 12ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், மருத்துவ முதுநிலை (எம்டி) மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவில், ‘நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்,’ என கோரப்பட்டது.

நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். ஏனென்றால், தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில இடங்களில் தேர்வு மையங்கள்  அமைக்கப்பட்டு இருந்தால், அவர்கள் எவ்வாறு இதில் கலந்து கொள்ள முடியும்?’ என்று வாதிட்டார்.  

ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க  மறுத்த நீதிபதிகள், ‘தேர்வு எழுதும் மாணவர்கள் பயணம் செய்வதற்கு எந்த தடைகளும் இல்லை. சென்னையில் இருந்து கொச்சிக்கோ அல்லது டெல்லிக்கோ சுலபமாக விமானத்தில் பயணிக்க முடியும். தற்போது, கொரோன பரவலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களை போல் மோசமாக இல்லை. ஒரு சில மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரிப்பது உண்மைதான். அதற்காக, கல்வி விஷயத்தில் அதையே பார்த்து கொண்டிருக்க முடியாது. சூழலுக்கு ஏற்ப நடந்து கொண்டுதான் ஆக வேண்டும். அதனால், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என தீர்ப்பு அளித்தனர்.

Related Stories: