அசாமில் பிரம்மபுத்திரா நதியில் இரு ராட்சத படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து!: ஒருவர் பலி..படகில் பயணம் செய்த 120 பேரின் கதி?

திஸ்பூர்: அசாமில் பிரம்மபுத்திரா நதியில் இரு படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அசாமின் பிரம்மபுத்திரா நதியில் உள்ள சிறிய தீவு பகுதியான மஜூலியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு படகு ஒன்று நிமதிஹட் பகுதியை நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு பயணிகள் படகு மீது சற்றும் எதிர்பாராத விதமாக அரசு படகு வேகமாக மோதியது.

இதில் சுமார் 60 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ராட்சத பயணிகள் படகு கவிழ்ந்து மூழ்கியது. அதில் பயணம் செய்த 120 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. தகவல் அறிந்து விரைந்து சென்ற பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் முதற்கட்டமாக 1 குழந்தை உள்பட 41 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மற்றவர்களை உயிருடன் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இரவு நேரத்திலும் தொடர்ந்த மீட்பு நடவடிக்கையின் போது பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது அச்சத்தை அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக பிரம்மபுத்திரா ஆற்றில் அதிகளவில் வெள்ளம் வருவதால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆற்றில் மூழ்கிய ஏராளமானோரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Stories: