கூடலூரில் பலத்த மழையால் மண்சரிவு: மாணவர்கள் அவதி

கூடலூர்: கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நேற்று மாலை திடீனெ கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மண் மற்றும் பாறை சரிந்தது.  நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. தேவாலா, சேரம்பாடி, உப்பட்டி, தேவர்சோலை, நடுவட்டம், மசினகுடி, முதுமலை, ஓவேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில்  தொடர்சியாக சாரல் மழையும் பெய்து வருகிறது. நேற்று மாலை பெய்த மழையால்  நாடுகாணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிரதான  சாலையை கடந்து ஓடியது. தேவாலா பந்தலூர் இடையே நீர்மட்டம் பகுதியில் சாலை ஓரத்தில் சிறிய மண், பாறைகள் சரிந்து விழுந்தன. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி சீரமைத்தனர்.

ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரது வீட்டின் பின்புறம் மிகப்பெரிய பாறை ஒன்று சரிந்து விழுந்துள்ளது.  எனினும் வீட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  மாலையில் மழை பெய்ததால் பள்ளி மாணவ, மாணவிகள் வீடு திரும்ப சிரமம் அடைந்தனர்.இதேபோன்று முதுமலை பகுதியில் பெய்த  கனமழையால் கூடலூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தெப்பக்காடு பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கர்நாடகாவில் இருந்து இருந்து கேரளாவிற்கு அதி கனரக சரக்கு வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருவதால் மேலும் சாலை மோசமடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி பந்தலூரில் 92 மி.மீட்டரும், தேவாலாவில் 59 மி. மீட்டரும் பதிவானது.

Related Stories: