உடுமலை கிராமங்களில் சில்லிங் மது விற்பனை ஜோர் பாராக மாறிய பஸ் நிறுத்தங்கள்: பாட்டில்களை வீசிச்செல்வதால் மாணவர்கள் அவதி

உடுமலை:  கொரோனா  தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள்  மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விற்பனை செய்ய மட்டும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, உடுமலை வட்டாரத்தில்  சில்லிங் மது விற்பனை ஜோராக நடக்கிறது. மதுக்கடையில் மொத்தமாக  மதுபாட்டில்களை வாங்கி, இரு சக்கர வாகனங்களில் கிராமங்களுக்கு கொண்டுசென்று  விற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை பெற்று,  குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து, கூடுதல் விலைக்கு மது விற்கின்றனர். இதனால்   பார்கள் மூடப்பட்டாலும் கிராமங்களில் உள்ள பஸ் ஸ்டாப்புகள் அனைத்தும் பார்களாக மாறியுள்ளன. செல்லப்பம்பாளையம் பஸ் நிறுத்தத்தில்,  குடிமகன்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை வீசிச் சென்றுள்ளனர்.  இதேபோல, சின்னபொம்மன் சாலை பஸ் நிறுத்தத்திலும் காலி மது பாட்டில்கள்  குவிந்துகிடக்கின்றன.

தற்போது உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள்  தொடங்கப்பட்டுள்ளதால், தினசரி மாணவ, மாணவிகள் இந்த பஸ் ஸ்டாப்புகளுக்கு  வருகின்றனர். மதுபாட்டில்கள் கிடப்பதை கண்டு முகம்சுளிக்கின்றனர். பயணிகள்  நிழற்குடையில் நிற்க முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. சிலர் பாட்டில்களை உடைத்துபோடுவதால், மாணவர்கள், பயணிகளின் காலில் குத்தி காயப்படுத்தும் அபாயம் உள்ளது.உடுமலையில்,  புதிய டிஎஸ்பி பொறுப்பேற்றதும் சில்லிங் மது விற்பனையை தடுக்க தீவிர  நடவடிக்கை எடுத்தார். ரோந்து சென்று காவலர்கள் கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டனர். ஆனால் சில வாரங்களிலேயே கண்காணிப்பு தொய்வடைந்தது. தற்போது  சில்லிங் மது விற்பனை தாராளமாக நடக்கிறது. போலீசார் யாரும்  கண்டு கொள்வதில்லை. காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், அந்தந்த  ஊராட்சி நிர்வாகங்கள் பஸ் நிறுத்தங்களை சுத்தப்படுத்தி, காலி  மதுபாட்டில்களை அப்புறப்படுத்த வேண்டும். பஸ் நிறுத்தத்தை பார் ஆக  பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: