ஊரப்பாக்கம் ஊராட்சியில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ இயக்கினார்

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மரை வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ இயக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சி செல்வராஜ் நகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறைந்த மின் அழுத்த பிரச்னை அப்பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இதில், வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க கோரி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனிடம் அப்பகுதி மக்கள், தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இப்பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, ரூ.6.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு செல்வராஜ் நகர் பிரதான சாலையோரத்தில் 100 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வி.எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சி.ஜே.கார்த்திக், ஜான் தினகரன், மெய்யழகன், தமிழ்ச்செல்வன், சண்முகம், ஸ்ரீகாந்த், எஸ்.எம்.சேகர், பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் கருணாகரன் வரவேற்றார்.

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் ஆப்பூர் சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு, புதிய மின்சார டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் சுஜாதா, மறைமலைநகர் உட்கோட்ட செயற்பொறியாளர் மனோகரன், கூடுவாஞ்சேரி உதவி செயற்பொறியாளர் நாகராஜன், ஊரப்பாக்கம் மேற்கு உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பவானிகார்த்திக் நன்றி கூறினார்.

Related Stories: