கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் கம்பம்மெட்டு, குமுளியில் சிறப்பு மருத்துவ முகாம்

கூடலூர் : கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து தமிழக, கேரள எல்லையான கம்பம்மெட்டு, குமுளியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களை சோதனை செய்வதுடன், வாகனங்களுக்கு கிருமிநாசினியும் தெளித்து வருகின்றனர்.

கேரளாவில் கொரோனா 2ம் அலை தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் வாழூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் கடந்த செப்.3ம் தேதி நிபா வைரஸ் அறிகுறிகளுடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தான். இது கேரள மக்களையும், அம்மாநில அரசையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் நிபா வைரஸ் பற்றிய அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. எனினும் தேனி மாவட்டம் தமிழக- கேரள எல்லை பகுதி என்பதாலும், நாள்தோறும் தமிழக பகுதியிலிருந்து கூலித்தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு சென்று திரும்புவதாலும், கேரளாவிலிருந்து ஏராளமானோர் பணி, வியாபாரம் தொடர்பாக தமிழகம் வந்து செல்வதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லை பகுதிகளில், மருத்துவக்குழு அமைத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உண்டா என சோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் உத்தரவின் பேரில், எல்லைப்பகுதிகளான கம்பம் மெட்டு, குமுளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், கொரோனா சோதனைக்காக அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினருடன் இணைந்து நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் காய்ச்சல், உடல் சோர்வு அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினியும் தெளிக்கப்படுகிறது.

இம்முகாமில் மருத்துவ அலுவலர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாளிலே ‘முடிந்து விடும்’

நிபா வைரஸ் 1998, 1999 ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. மலேசியாவின் நிபா கிராமத்தில் முதன்முதலில் இக்கிருமி தொற்று கண்டறியப்பட்டதால் நிபா வைரஸ் என பெயரிடப்பட்டது. வவ்வால்களின் சிறுநீரில் இருந்தும், மலத்திலிருந்தும், உமிழ் நீரிலிருந்தும் இந்த வைரஸ் பரவுகிறது. வவ்வால்களிடமிருந்து வீட்டு வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை, ஆடு, குதிரை, பன்றி ஆகிய விலங்குகளுக்கு பரவுகிறது. அந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நிபா வைரஸ் என்செஃபாலிட்டிஸ் எனும் மூளை காய்ச்சல் நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், தலைவலி, மயக்கம், கோமா பின்னர் மரணம் என நோய் தாக்கிய சில நாட்களிலேயே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது.

போடி மெட்டு சாலையிலும் சோதனை

போடி மெட்டு மலைச்சாலையில் 17வது கொண்டை ஊசி வளைவில் நேற்று முதல் போலீசார், சுகாதாரத்துறையினர் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகள், சுற்றுலா பயணிகள் என அனைவரையும் சோதனை செய்து அனுப்பும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related Stories: