கேரளாவில் நிபா வைரஸ் அறிகுறி தென்பட்ட 8 பேருக்கு தொற்று இல்லை!: புனே நுண்ணுயிரி ஆய்வகம் உறுதி..!!

கோழிக்கோடு: கேரளாவில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட 8 பேருக்கும் கிருமி தொற்று இல்லை என்று புனே நுண்ணுயிரி ஆய்வகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் உயிரிழந்தான். அவனது ரத்த மாதிரிகளை சோதனையிட்ட போது வௌவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்தது கண்டறியப்பட்டது. நோய் வாய்படும் முன் சிறுவன் ரங்குட்டான் என்ற பழத்தை உண்டதாக பெற்றோர் தெரிவித்தனர். எனவே பழந்திந்தி வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவி இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுவனுடன் தொடர்ப்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட உறவினர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 251 பேரில் 11 பேருக்கு நிபா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அதில் 8 பேரின் மாதிரிகள் புனே நுண்ணுயிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. சோதனையில் 8 பேருக்கும் நிபா வைரஸ் கிருமி இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சாத்தமங்கலம் செல்லும் சாலைகளை அடைத்துள்ள கேரள அதிகாரிகள், சாத்தமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் வீட்டு வளர்ப்பு விலங்குகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

கோழிக்கோட்டில் கண்டறியப்பட்டுள்ள நிபா வைரஸை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைத்து ஒன்றிய சுகாதார அமைச்சகம், கேரள தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கோழிக்கோட்டில் முகாமிட்டுள்ள மத்திய அரசின் சிறப்பு மருத்துவ குழுவும் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை நடத்தி மாதிரிகளை சேகரித்து வருகிறது. இதனிடையே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கண்ணூர், மலப்புரம், வயநாடு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: