மாமல்லபுரம் அரசு பள்ளி மாணவிக்கு கொரோனா: சக மாணவிகளுக்கு பரிசோதனை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அரசு பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள், பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 1ம் தேதியன்று 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து சமூக இடைவெளியை பின்பற்றி படித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக ஒரு பெஞ்ச்க்கு 2 பேர் வீதம் 20  மாணவ, மாணவிகள் வரை அமர வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 2ம் தேதி ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 20 மாணவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

இதில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி  செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவி நேற்று பள்ளிக்கு வரவில்லை. இதற்கிடையே, ஒரு மாணவிக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பள்ளி நுழைவாயில், ஜன்னல், மாணவர்கள் அமரும் பெஞ்ச், சமையலறை, குடிநீர் தொட்டி உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்தனர். மேலும், பேரூராட்சி மூலம் கொரோனா ஏற்பட்ட மாணவி அமர்ந்திருந்த வகுப்பறையில் 21 மாணவர்களுக்கும், தனியார் பள்ளியை சேர்ந்த 7 மாணவர்கள் என மொத்தம் 28 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில், ‘பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள், ஆசிரியைகள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: