திருச்செங்கோட்டில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் புகுந்த கொள்ளை கும்பல்: ரூ.30 கோடி பணம், நகைகள் தப்பியது

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் முதல் மாடியில், பொதுத்துறை வங்கியின் கிளை இயங்கி வருகிறது. ஊழியர்கள் வழக்கம் போல், சனிக்கிழமை மாலை 7 மணிக்கு வங்கியை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவில் கொள்ளையர்கள், வங்கியின் முன்புறம் இருந்த மின்விளக்கு மற்றும் சிசிடிவி கேமராவை உடைத்து விட்டு, வடக்கு புறம் உள்ள ஜன்னலின் கம்பிகளை இயந்திரம் மூலம் அறுத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், நகை, பணம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றுள்ளனர்.

ஆனால், அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால், திரும்பிசென்றனர். நேற்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் கிடைத்ததும் திருச்செங்கோடு போலீசார் வங்கிக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் வங்கியின் லாக்கரை கொள்ளையரால் உடைக்க முடியாததால், அதில்இருந்த ரூ.75 லட்சம் ரொக்கம், நகைகள் என ரூ.30 கோடி மதிப்புள்ள நகை, பணம் தப்பியது தெரியவந்தது. சிசிடிவி பதிவுகளை பெற்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: