திருவாரூர் மாவட்டத்தில் தேர்வான 9 நல்லாசிரியர்களுக்கு விருது-பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா

திருவாரூர் : தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறையின் சார்பில் பாராட்டு விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ். விஜயன் கலந்து கொண்டு 9 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கு, திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், நாகை எம்பி செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன் தெரிவித்ததாவது: ஆசிரியர் சமுதாய உயர்விற்காக எண்ணற்ற திட்டங்களை தந்த தமிழக மக்களின் ஒப்பற்ற தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் வழியில் ஆசிரியர் சமுதாயத்தின் உயர்விற்காக பணியாற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வித்துறைக்கு எண்ணற்ற திட்டங்களையும், சலுகைகளையும் தீட்டி செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழக அரசால் பள்ளி கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு குணநலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொதுநலபோக்கு, நல்லொழுக்கம் போன்றவற்றை கற்பிக்கும் காரணிகளாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள். மேலும், சமுதாய சீர்த்திருத்ததில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. சமுதாய முன்னேற்றத்திற்காக ஆசிரியர்கள் ஆற்றும் பணி சிறப்பான பணியாக அமைகிறது. மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற அந்த ஆசிரியர்களை கவுரவப்படுத்துகின்ற விதமாக ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது என டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கான சான்றிதழ்கள், வெள்ளி பதக்கங்கள் மற்றும் ரூ.10ஆயிரம் பரிசு தொகைக்கான காசோலைகளை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன் வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், திருவாரூர் ஒன்றியக்குழுத் தலைவர் தேவா, மாவட்டக்கல்வி அலுவலர்கள் பார்த்தசாரதி, மணிவண்ணன், திருவாரூர் பழனியாண்டவர் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: