ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து 20ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்: வேளாண் சட்டம், விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பதற்கு எதிர்ப்பு; தலைவர்கள் கூட்டறிக்கை

சென்னை: வேளாண் சட்டம், விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பது உள்ளிட்ட ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து வரும் 20ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. ஆளும் பாஜ ஒன்றிய அரசுக்கு எதிராக, பொதுவான வியூகங்களை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கடந்த மாதம் 20ம் தேதி நடந்தது.

இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேசிய  மாநாட்டு கட்சி, ஆர்ஜேடி, ஏஐயுடிஎப், விடுதலை சிறுத்தைகள், லோக்தன்ரிக்  ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆர்எல்டி, ஆர்எஸ்பி, கேரள காங்கிரஸ் (மானி), பிடிபி மற்றும் ஐயுஎம்எல் ஆகிய 19 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக, பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து செப்டம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் 10 நாட்கள் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என இக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் கூட்டாக முடிவு செய்தனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘‘மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காத பாஜ அரசால் கூட்டாட்சிக் கொள்கை அழிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது கட்டாயம். அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நமது ஒற்றுமையைக் கண்டது. இது இன்னும் வலிவுடையதாக வளரவேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கையினை திமுக முழுமையாக ஆதரிக்கும்’’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மக்கள் விரோத-ஜனநாயக விரோத ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து வருகிற 20ம் தேதி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கண்டன போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத-ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ஒன்றிய பாஜ அரசின் செயல்களைக் கண்டித்து திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் வருகிற 20ம் தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒருங்கிணைந்து போராடுவோம். மதசார்பற்ற-ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜ அரசால் கூட்டாட்சிக் கொள்கை அழிக்கப்படுகிறது.  இப்போது,  எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது கட்டாயம். அண்மையில் நடந்த  நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நமது ஒற்றுமையைக் கண்டது. அது

இன்னும் வலிவுடையதாக வளரவேண்டும்.

Related Stories: