தரங்கம்பாடி நீதிமன்றம் உத்தரவின்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு: ஊராட்சி தலைவரை மிரட்டியதால் நடவடிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ். எம்.எல்ஏவாக இருந்த இவர், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 2வது தடவையாக போட்டியிட்டார். அப்போது பவுன்ராஜ் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எடக்குடி அதிமுக ஊராட்சி தலைவர் தங்கமணி (56) கடந்த ஏப்ரல் 5ம்தேதி பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார். அதில், பவுன்ராஜ் வெற்றிக்காக ரூ.5.48 லட்சத்தை ஆதரவாளர்கள் மூலம் கொடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க சொன்னார். அதற்கு நான் மறுத்ததால் பவுன்ராஜ், போனில் குடும்பத்தை நிம்மதியாக வாழவிட மாட்டேன் என மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த மிரட்டல் குறித்த சிடி ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக பெரம்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பாக தங்கமணி, தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்கனியிடம் ஏப்ரல் 23ம்தேதி மனுதாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணைக்கு பின்னர் நீதிபதி உத்தரவில் பெரம்பூர் இன்ஸ்பெக்டர், புகார் தாரர் கொடுத்த புகாரின் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506(2) ன் கீழ் பவுன்ராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றம் உறுதியாகும் பட்சத்தில் அதனை பொருத்து விசாரணை செய்திட வேண்டும். இந்த அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து, பெரம்பூர் போலீசார் முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: