குன்னூரில் விதி மீறி மண் அகற்றிய விவகாரம் அந்தரத்தில் தொங்கும் 3 கட்டிடங்களில் தங்கியிருந்த மக்கள் வெளியேற உத்தரவு

குன்னூர்: குன்னூரில் விதி மீறி மண் அகற்றியதால் அந்தரத்தில் தொங்கும் 3 கட்டிடங்களில்  வசிப்பவர்கள் வெளியேற உத்தரவிடப்பட் டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் கடந்த ஒருமாத காலமாக அதிமுக நிர்வாகியின் இடத்தில் 2 பொக்லைன் மூலம் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.  இதனால் திடீரென அரசு மருத்துவமனையின் தடுப்புச்சுவரின் ஒரு பகுதி  இடிந்து விழுந்தது. மேலும் அரசு மருத்துவமனைக்கு தன்னார்வலர்கள் இலவசமாக வழங்கிய ஆக்ஸிஜன் யூனிட் தற்போது அந்தரத்தில் தொங்கி வருகிறது. மருத்துவமனை கட்டிடம் அந்தரத்தில் தொங்குவதால் எக்ஸ்ரே ஆய்வு மையத்திற்கு செல்லும் பாதை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்கம்பங்கள் விழுந்ததால் தற்போது மருத்துவமனைக்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

 இத்தகவலறிந்த சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். உடனடியாக அங்கு நடைபெற்ற பணிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தினார். தடுப்புச்சுவர் கட்டுவதாக கூறி அனுமதி பெற்று விதி மீறி மண் அகற்றியது தெரியவந்தது. உடனடியாக  நில உரிமையாளர் யோகேஷ்க்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அரசு மருத்துவமனை கட்டிடம் உட்பட குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்குவதால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முதற்கட்டமாக மண் மூட்டை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்க உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அங்கு வந்த ஒன்றிய மண் வள பாதுகாப்பு அதிகாரி மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டு விதி மீறி மண் அகற்றியதை உறுதி செய்தார். மேலும் தற்போதைய நிலவரப்படி மழை பெய்தால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. தடுப்புச்சுவர் அமைக்கவில்லை என்றால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து அந்த இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக அந்தரத்தில் தொங்கும் 3 வீடுகளில் வசிக்கும் மக்களை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: