போலி துப்பாக்கி, போலி லைசென்ஸ் பயன்படுத்திய காஷ்மீர் வாலிபர்களை சிக்க வைத்த மாஜி ராணுவத்தினர்: ராணுவ உளவுத்துறை விசாரணை..!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் போலி லைசென்ஸ் மற்றும் போலி துப்பாக்கி வைத்திருந்த காஷ்மீரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரா மற்றும் ராணுவ உளவுத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கேரளாவில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவை தேர்தலையொட்டி லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அனைவரும் துப்பாக்கிகளை ஒப்படைத்த நிலையில் திருவனந்தபுரம் கரமனையில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை. இதனால் போலீசார் அவர்களை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த துப்பாக்கி லைசென்ஸ் உள்ள முன்னாள் ராணுத்தினர் கரமனை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அதில், தேர்தலையொட்டி தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்து விட்டதால் தங்களுக்கு பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் நிறுவன ஊழியர்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை. மேலும் அவர்களுக்கு துப்பாக்கியை எப்படி பிடிக்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அந்த நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதன்பின் அந்த நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் தங்கள் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, இந்த துப்பாக்கிகள் காஷ்மீரில் வாங்கப்பட்டது என்றும், அதற்கு ரஜவுரி மாவட்டத்தில் லைசென்ஸ் பெற்றிருப்பதாகவும் கூறினர். ஆனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, துப்பாக்கி லைசென்ஸ் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரமாக்கிய போலீசார் துப்பாக்கிகளை ஆய்வு செய்தனர்.

இதில் துப்பாக்கிகளும் போலியானவை என தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், காஷ்மீரில் இருந்து ரூ.40 ஆயிரத்துக்கு போலி துப்பாக்கி மற்றும் போலி லைசென்ஸ் வாங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காஷ்மீர் ரஜவுரி மாவட்டத்தை சேர்ந்த சவுகத் அலி (27), முஸ்தாக் உசேன் (24), சுக்கூர் அகமது (23), முகம்மது ஜாவேத் (22), குல்சமன் (22) ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காஷ்மீரை சேர்ந்த வாலிபர்கள் போலி துப்பாக்கி மற்றும் போலி லைசென்ஸ் வைத்துகொண்டு கேரளாவில் முக்கிய பணியில் இருந்தது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரில் உள்ள ரஜவுரி என்ற இடம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் இந்த வாலிபர்களின் பின்னால் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி ஏதாவது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ஒன்றிய உளவுத்துறையான ரா மற்றும் ராணுவ உளவுத்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இவர்களை இங்கு வேலைக்கு அனுப்பிய மகாராஷ்டிராவை சேர்ந்த ஏஜென்சியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Related Stories: