வறுமையில் 10 ஆயிரம் குடும்பங்கள்; 2 ஆண்டாக குளங்களில் மீன் பிடிக்க அனுமதி தராமல் இழுத்தடிப்பு: அரசுக்கு வருவாய் இழப்பு

நாகர்கோவில்:  குமரியில் 2 ஆண்டுகளாக  குளங்களில் மீன் பிடிக்க மீன்வளத்துறை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி மறுப்பதால் 10 ஆயிரம் குடும்பங்கள் வறுமையில் சிக்கியுள்ளன. குமரியில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவற்றில் கடந்த 50 ஆண்டுகளாக  உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில்,  மீன்வளத்துறை மூலம் மீன்வளர்ப்பு மற்றும் பிடிப்பதற்கான உரிமை ஏலம் விடப்படுகிறது. பின்னர் அந்த குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு, அவை வளர்ந்ததும், பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு  வருகின்றன. 78 கிராமங்களில்  26 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர். இவர்கள், கட்லா, ரோகு, புல் கெண்டை,  மிர்கால், கண்ணாடி கெண்டை போன்ற மீன்களை வளர்கிறார்கள். கடந்த 2019ம் ஆண்டு திடீரென ஏலம் விடுவது நிறுத்தப்பட்டது. இதனால், பல லட்சம் செலவு செய்து, மீன்குஞ்சுகளை விட்ட உள்நாட்டு மீனவர் சங்கங்கள் அதிர்ச்சி அடைந்தன. இது பற்றி கலெக்டர் அலுவலகத்தில் கேட்ட போது, குளங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் ஏலம் விடமுடியும் எனக்கூறியுள்ளனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் முறையிட்ட போது, இதுவரை எங்களுக்கு ஏலம் விடலாம் என்பதற்கான உத்தரவு வரவில்லை. எனவே வந்த பின்னர்தான் ஏலம் விட முடியும் எனக் கூறிவிட்டனர். இதற்கிடையே கொரோனா தொற்றால் ஏற்பட்ட முடக்கத்தில், வேறு தொழிலிலும் செய்ய முடியாமல் வறுமையில் உள்நாட்டு மீனவர்கள் தவித்து வருகின்றனர். அரசுக்கும் ஆண்டிற்கு a50 லட்சம் வரை இதனால், இழப்பு ஏற்பட்டு வருகிறது. மீனவர் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ச்சியாக மகா சபை கூட்டங்கள் நடத்தி,  குளங்களில்  மீன்வளர்ப்பு மற்றும் பிடிக்கும் குத்தகையை புதுப்பிக்கவும், ஏற்கனவே விடப்பட்ட மீன்களை பிடிக்கவும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வருகின்றனர்.

மீன்வளர்ப்பு முகமை என்னாச்சு?

குமரியில் மீன்வளர்ப்பு மேம்பாட்டு முகமை கலெக்டர் தலைமையில் இயங்கி வருகிறது.  இதில் மீன்வளத்துறை துணை இயக்குநர் மற்றும் இணைஇயக்குநர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கட்டுப்பாட்டில்  60 குளங்கள் குமரியில் உண்டு. தற்போது இந்த குளங்களிலும் கூட மீன்கள் வளர்க்க மற்றும் பிடிக்க உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை.

தாமரை மூலம் கோடி கணக்கில் வசூல்

இதுபற்றி குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய முன்னாள் தலைவரும்,  தோவாளை வட்ட  உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க  தலைவருமான  ஐயப்பன் என்ற சகாயம்  கூறியதாவது: குமரியில் 44 கடலோர கிராமங்களில்  88 கடலோர  மீனவர் கூட்டுறவு சங்கங்களும், 78 உள்நாட்டு  கிராமங்களில்  26 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களும் உள்ளன.  குமரியை பொறுத்தவரை இருமுறை பருவமழை பெய்யும் மாவட்டம் என்பதால், வலை வீசி மீன்களை பிடித்து வருகிறோம்.

தற்போது  குளங்களில் நாங்கள் விட்டுள்ள குஞ்சுகள் பெரிய மீன்களாக வளர்ந்து விட்டன. எங்களுக்கு அனுமதி தராததால், சிலர் இந்த மீன்களை  திருட்டுதனமாக பிடித்து  விற்பனை செய்து வருகின்றனர்.   மீன்கள் திருடுபவர்களை மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் தடுக்கும் போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.  தற்போது குமரி குளங்களில், உச்ச நீதிமன்ற தடையை மீறி தாமரை வளர்த்து வருகின்றனர். இதனால், போடப்படும் ரசாயன உரங்கள் மற்றும் செயற்கையாக வளர்க்கப்படும் தாமரைகளால், விவசாயிகள், குளங்களில் குளிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குளங்களில் மாசுவை சுத்தம் செய்யும் மீன்களும் அழிகின்றன.

அதிகாரிகளுக்கு அனைத்து குளங்களுக்கும் சேர்த்து ஆண்டு தோறும் ஒரு கோடி வரை பணம் மாமூலாக அளிப்பதாக தாமரை வளர்ப்பாளர்கள் கூறுகின்றனர். வடக்குதாமரைகுளம் பாறைக்குளத்தில் ஊர் பொதுமக்கள் தூர்வாரி குளிக்க பயன்படுத்தியதுடன், அங்கு உறைகிணறு மூலம் ஊராட்சி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தனியார் மூலம் சட்ட விரோதமாக அங்கு தாமரைகள் பயிர் செய்யப்படுவதால், குளிக்க முடியாமல் போனதுடன், குடிநீரும் மாசடைந்த நிலையில் உள்ளது. குளங்களில் மண் அள்ளுபவர்களை கைது செய்யும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தாமரை வளர்ப்பை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?  இதுபற்றியும் தமிழக அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: