ஆற்காடு அருகே 2 நரிக்குறவர் பெண்களுக்கு உதவித் தொகைக்கான ஆணை-தனி தாசில்தார் நேரில் வழங்கினார்

ஆற்காடு :  ஆற்காடு அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 2 பெண்களுக்கு விதவை உதவித் தொகைக்கான ஆணையை நேற்று தனி தாசில்தார் பயனாளிகளிடம் நேரில் வழங்கினார்.

வாலாஜா வட்டம்,  ஆற்காடு அடுத்த வேப்பூரில் நரிக்குறவர் குடியிருப்பு  பகுதியில் நாதூரம்மா, காசியம்மா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு விதவை உதவித்தொகை கோரி கடந்த வாரம் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அவர் அந்த மனுவை ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்க்கு பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை சார்பில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும்  மேற்கண்ட 2 பெண்களுக்கும் வங்கிக்கணக்கு இல்லாததால் புதியதாக வங்கி கணக்கு துவக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு விதவை உதவித் தொகைக்கான ஆணையை வாலாஜா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாக்கியநாதன் வேப்பூரில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்று பயனாளிகளிடம் நேரில் வழங்கினார்.  

அப்போது வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி,  விஏஓ கதிரவன், கிராம உதவியாளர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர். கோரிக்கை மனு அளித்த உடன் நடவடிக்கை எடுத்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்,  சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாக்கியநாதன் மற்றும் வருவாய்த் துறையினருக்கு  நரிக்குறவர் குடியிருப்பு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: