17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பல மாநிலங்களில் தொற்று உயர்வு: மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் சரிவு

புதுடெல்லி: கொரோனா 3வது அலை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதில், 17 வயதுக்கு உட்பட சிறுவர்களே அதிகமாக பாதிப்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதில், ஏற்கனவே பள்ளிகளை திறந்த பல மாநிலங்களில் 17 வயதுக்கு உட்பட மாணவர்கள் இடையே கொரோனா பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. அதே நேரம், சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் இந்த வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பாதிப்பு சதவீதம் குறைந்துள்ளது. பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம், குஜராத், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாதிப்பு சதவீதம் அதிகமாகி இருக்கிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்திருந்த மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் குறைந்துள்ளது.

* பஞ்சாபில் கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஜூலையில் இம்மாநிலத்தில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தொற்று சதவீதம் 6.5 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் இறுதியில் இது, 9.6 சதவீதம்  உயர்ந்து 16.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

* பீகாரில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஜூலையில் இங்கு 6.2 சதவீதமாக இருந்த பாதிப்பு சதவீதம், ஆகஸ்ட் இறுதியில்  5.3 சதவீதம் அதிகரித்து 11.5 சதவீதத்தை எட்டியுள்ளது.

* மகாராஷ்டிராவில் கடந்த ஜூலையில் 11.2 சதவீதமாக தொற்று இருந்தது.  தற்போது இது 0.4 சதவீதம் குறைந்து, 10.8 சதவீதமாகி உள்ளது.

* ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஜூலையில் இங்கு 7.9 சதவீதமாக இருந்த தொற்று சதவீதம், ஆகஸ்ட்டில் 7.2 சதவீதமாக குறைந்துள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு தொற்று அதிகரித்துள்ள மாநிலங்கள்

மாநிலம் தொற்று அதிகரிப்பு (%)

(ஜூலையில் இருந்ததை விட)

பஞ்சாப்    +9.6

பீகார்    +5.3

மத்திய பிரதேசம்    +2.9

குஜராத்    +2.5

சட்டீஸ்கர்    +2.3

உத்தரகாண்ட்    +1.9

தொற்று குறைந்துள்ள மாநிலங்கள்

மாநிலம் தொற்று சரிவு

மகாராஷ்டிரா    -0.4

ஜார்கண்ட்    -0.7

சண்டிகர்    -0.1

30 ஆயிரமாக சரிந்தது

நாட்டில் கடந்த சில நாட்களாக 40 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 30 ஆயிரமாக சரிந்தது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைக்கசம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை:

* கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேர் புதிதாக பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 68 ஆயிரத்து 880 ஆனது.

* புதிதாக 350 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது.

* நாடு முழுவதும் 3 லட்சத்து 70 ஆயிரத்து 640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இதுவரை 64.05 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* 100 சதவீத தடுப்பூசி: இமாச்சல் சாதனை

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம், கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதில், இதுவரையில் 64 கோடி டோஸ் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டு, இமாச்சல பிரதேசம் சாதனை படைத்துள்ளது. இது பற்றி இம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜீவ் சைசால் கூறுகையில், ‘‘இமாச்சால பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் நவம்பர் 30க்குள் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: