கண்ணூர் ஏர்போர்ட்டில் பரபரப்பு; ரூ15 லட்சம் தங்கத்தை உருக்கி பேண்டில் ஒட்டி கடத்தல்: எக்ஸ்ரே பரிசோதனையில் வாலிபர் சிக்கினார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் ஏர்போர்ட்டில் ரூ.15லட்சம் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி பேண்டில் ஒட்டி வைத்து கடத்திய வாலிபர் எக்ஸ்ரே பரிசோதனையில் பிடிபட்டார்.  இந்தியாவிலேயே கேரளாவில் தான் பெருமளவு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் வழியாக அடிக்கடி தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக துபாய், சார்ஜா, பக்ரைன் உள்பட வளைகுடா நாடுகளில் இருந்து தான் அதிகப்படியாக கடத்தப்படுகிறது. மேலும் கேரளாவில் தான் வெளிநாட்டு தூதர பார்சல் வழியாகவும் தங்கம் கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தகது.

கடந்த வருடம் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதர பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம்  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு தங்க கடத்தப்படுவதை தடுக்க சுங்க துறை மற்றும் வருவாய் புலனாய்வு துறை தீவிர நடவடிக்கை எடுத்தாலும், மோசடி கும்பல் பல்வேறு நூதன முறைகளை கையாண்டு கடத்தலை தொடரத்தான் செய்கின்றன. இந்தநிலையில் நேற்றும் கண்ணூர் விமான நிலையத்தில் ஒரு நூதன தங்க கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. துபாயில் இருந்து கண்ணூருக்கு நேற்று இரவு விமானம் ஒன்று தரையிறங்கியது. வழக்கம்போல் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. வழக்கமான சோதனையில் அவரிடம் ஒன்றும் சிக்கவில்லை. ஆனாலும் அதிகாரிகளுக்கு அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றதால் அவரை தனிஅறைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே பரிசோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த பேண்டியில் தங்கம் இருந்தது தெரியவந்தது. பேண்டை கழற்றி பரிசோதித்தபோது பசை வடிவில் பேண்டில் தங்கத்தை ஒட்ட வைத்து, அதன்மேல் ேவறொரு துணியை தைத்து மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 302 கிராம் தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். விசாரணையில் அவர் கண்ணூரை சேர்ந்த சிகாப் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: