இலங்கை தமிழர் நலனுக்கு 317 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு செந்தில் தொண்டமான் நன்றி

சென்னை: இலங்கை தமிழர் நலனுக்காக 317 கோடி நிதி ஒதுக்கியதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.  தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக, ரேஷனில் இலவச அரிசி, கியாஸ் இணைப்பு உள்ளிட்டவை வழங்குவதற்காக 317 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக சட்டசபையில் 110 விதியின் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான அந்நாட்டு பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடப்பு நிதி நிலைக் கூட்டத் தொடரின்போது இலங்கை தமிழர்களின் நலனுக்காக 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதற்காக நன்றி தெரிவித்தார்.

வைகோவுடன் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்புத் துறை அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நேற்று சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்தார். அப்போது, தனது தந்தையார் ஆறுமுகம் தொண்டைமான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தமைக்காக வைகோவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, அவர் “தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக, நுவரேலியாவில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும். தமிழக அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். அதற்காக முதல்வரையும் சந்திக்க இருக்கிறோம்” என தெரிவித்தார்.

Related Stories: