ஆப்கானில் இசைக்கு தடை; நாட்டுப்புற பாடகர் சுட்டுக் கொலை: தலிபான்கள் அட்டூழியம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப்புற பாடகர் ஒருவரை தலிபான்கள் அவரது வீடு புகுந்து சுட்டுக் கொன்றனர். தலிபான்களால் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தானின் கிஷ்னாபாத் பள்ளத்தாக்கில் வசித்து வந்தவர் பிரபலமான நாட்டுப்புற பாடகர் ஃபவாத் அந்தராபி. இவர் ேநற்று தனது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த தலிபான்கள் அவரை வீட்டிற்குள் இருந்து வெளியே இழுத்து போட்டு சுட்டுக் கொன்றனர். இதனை அவரது மகன் உறுதி செய்தார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

அதேபோல், பெண்கள் தனியாக வெளியே போகக் கூடாது என்றும், அவ்வாறு வெளியே சென்றால், ஆண் துணையுடன் செல்ல வேண்டும் என்று, புதிய விதிகளை அமல்படுத்தினர். இதுதொடர்பாக, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ‘இஸ்லாத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், இசைக்கு தடை செய்யப்படுகிறது’ என்றார். கடந்த ஜூலை மாதம், ஆப்கானிஸ்தான் காவல்துறை அதிகாரியை தலிபான்கள் சுட்டுக்  கொன்றனர். இவர், ஆன்லைனில் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிடுவதில்  பிரபலமானவர். சமூக ஊடகங்களில் இவரது வீடியோ கிளிப்புகள் வெளியே வந்ததால்,  சுட்டுக் கொல்லப்பட்டார்.

Related Stories: