கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பேரணி வந்த சிஆர்பிஎப் வீரர்கள் திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மரியாதை

திருப்பூர் : கன்னியாகுமரியில் இருந்து சைக்கிளில் பேரணியாக திருப்பூர் வந்த மத்திய பாதுகாப்பு படையினர்(சிஆர்பிஎப்)  திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ் என்ற தலைப்பில், சிஆர்பிஎப் வீரர்கள் 20 பேர் உதவி ஆணையர் பிரதீப் தலைமையில் கன்னியாகுமரியிலிருந்து டெல்லி ராஜ்காட் காந்தி நினைவிடம் வரை சுமார் 2,850 கி.மீ. தொலைவிற்கு சைக்கிள் பேரணியை கடந்த 22ம் தேதி தொடங்கினர்.

பேரணியின் போது, நாட்டில்  சகோதரத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை போன்ற கோட்பாடுகளை  பேணிகாக்கவும் கொரோனா குறித்த  விழிப்புணர்வு மற்றும் தேசத்தின் விடுதலை வரலாறு குறித்து வீரர்கள்  பரப்புரை செய்து வருகின்றனர்.இப்பேரணி கன்னியாகுமரி திருவேணி  சங்கமத்தில் தொடங்கி சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்கள் வாழ்ந்த  திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு,  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள்  வழியாக கர்நாடகா சென்று தொடர்ந்து ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா,  மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் வழியாக சென்று அக்டோபர் 2  ம் தேதி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் நிறைவடைய உள்ளது. சைக்கிள் பேரணி 450 கிமீ கடந்து நேற்று திருப்பூர் அவினாசிபாளையம் தனியார் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைந்தது. அங்கு வீரர்களுக்கு காவல் துறையினர், பொதுமக்கள், கல்லூரி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் ஐ.எம்.ஜி.கே.ஏ. கராத்தே அமைப்பு சார்பில் தற்காப்பு செயல்முறை விளக்கம், கும்மியாட்டம், சிலம்பாட்டம் என கலை நிகழ்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்சியில்  மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டர் பயாஸ், பல்லடம் டிஎஸ்பி வெற்றி செல்வன், பல்லடம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் சிஆர்பிஎப் வீரர்களின் சைக்கிள் பேரணியை அவிநாசிபாளையம் பகுதியிலிருந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேரணியாக மாநகரப்பகுதிக்குள் வந்து கொடிகாத்த திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் மலர் வளையம் வைத்து வீரர்கள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து வீரர்கள் சைக்கிள் பயணத்தை தொடர்ந்தனர்.

Related Stories: