என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்-மயிலாடுதுறையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது. கொரோனா தொற்று கட்டுப்பாடு ஓரளவிற்கு குறைந்து ஆரம்பிக்கும் முதல் கூட்டம் என்பதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டனர். அதையடுத்து கூட்டம் அதிகமாக இருந்ததால் மாவட்ட ஆட்சியர் 20 விவசாயிகளாக கூட்ட அரங்கில் வரவழைத்து கூட்டத்தை நடத்தினார்.

விவசாயிகள் தங்களது குறைகளை மனுவாக தரும்படி கேட்டதன்பேரில் கோரிக்கை மனுக்களை அளித்தனர். காவிரிடெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் குருகோபிகணேசன் அளித்த மனுவில், நெல்மணிகள் வீணாகிவிடக்கூடாது என நினைக்கும் தமிழக முதல்வர் எண்ணத்திற்கேற்ப தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும், டிகேஎம்.9 என்கிற மோட்டா ரகத்தை கொள்முதல் செய்யவேண்டும், பயிர் காப்பீடு இல்லாத இந்த நேரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீடீர் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர் சாய்ந்து வீணாகிப்போயுள்ளது. அவற்றை கணக்கெடுத்து நிவாரணம் வழங்கவேண்டும், தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூர் கூட்டுறவு கடன் சங்கத்தின்மூலம் 2017-18ஆம் ஆண்டு வரவேண்டிய மீதமுள்ள 50% காப்பீட்டுத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க சீர்காழி வட்ட தலைவர் வீரராஜ் அளித்த மனுவில், சீர்காழியை மையமாக வைத்து இயங்கக்கூடிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கான கிடங்கு அமைக்க இடம் தேடிவருவதாக கேள்விப்பட்டோம், சீர்காழியை அடுத்துள்ள சூரக்காடு பகுதியில் காரைமேடு ஊராட்சியில் அரசு புறம்போக்கு இடம் 2 ஏக்கருக்கும்மேல் உள்ளது. இது நாகை -சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஒழுஙகுமுறை விற்பனைக்கூட கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் முருகன், மற்றும் காவேரி பாசனதாரர் முன்னேற்ற சங்க சீர்காழி மோகனஇளங்கோ ஆகியோர் அளித்த மனுவில், மயிலாடுதுறை என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க மயிலாடுதுறை எம்.பி. எடுத்துவரும் நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் முழு ஒத்துழைப்பு அளித்து மீண்டும் இயக்க வேண்டும். நிலத்தடிநீரை உயர்த்துவதற்கும், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் நல்ல முறையில் செயல்படுவதற்கு சீர்காழி அருகே உள்ள சித்தமல்லியில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை ஒன்றை ஏற்படுத்தவேண்டும், பயிர் கடனை உடனடியாக வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

டெல்டா பாசனதாரர் சங்க தலைவர் அன்பழகன் அளித்த மனுவில், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மிகக்குறைந்த அளவே உள்ளதால் அறுவடை செய்த நெல் தேங்கியுள்ள திருஇந்தளூர், நீடூர், வரதம்பட்டு மற்றும் ஆத்துக்குடி ஆகிய பகுதிகளில் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும். அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்றார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் பொதுப்பணித்துறை, விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: