உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் சென்னை ஐகோர்ட் நீதிபதி 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 வழக்குகளில் தீர்ப்பளித்தவர் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்: உயர் நீதிமன்றத்தில் வழியனுப்பு விழா

சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழியனுப்பு விழா நேற்று நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஈரோட்டை சேர்ந்தவர். லயோலா கல்லூரியில் பிஏ பட்டம் பெற்ற இவர், சென்னை சட்டக் கல்லூரியில் 1985ல் சட்டப் படிப்பை முடித்தார். இவரது தந்தை மூத்த வக்கீல் வி.கே.முனுசாமி. சிவில் மற்றும் ரிட் வழக்குகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 1991 முதல் 1996வரை அரசு வக்கீலாக பணியாற்றினார். 2009 மார்ச் 31ம் தேதி தனது 47வது வயதில் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர் 2011ல் நிரந்த நீதிபதியானார்.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உச்ச நீதிமன்ற நீதிபதியானதால் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்துள்ளது. மொத்தம் 75 நீதிபதிகளில் தற்போது 19 இடங்கள் காலியாக உள்ளன. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.  நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதிகள் கலந்துகொண்டனர். தலைமை நீதிபதி, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், டி.ராஜா, பி.என்.பிரகாஷ் ஆகியோர் நீதிபதி எம்.எம்.சுந்தரேசுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

 விழாவில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பேசும்போது, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் 24 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், 12 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தனது 12 ஆண்டு பதவி காலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 563 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். உச்ச நீதிமன்றத்திலும் அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம் என்றார்.

 இதையடுத்து, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, ‘‘இந்த உயர் நீதிமன்றத்தில் வக்கீலாகவும், நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளேன். பிரிவு என்பது எப்போதும் சிக்கலானதுதான் என்றாலும் வாழ்க்கை முன்னோக்கி செல்ல வேண்டும். அனைவரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இதுவரை லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்திருந்தாலும், மனசாட்சிக்கு எதிராக ஒரு தீர்ப்பும் வழங்கியதில்லை’’ என்றார்.

Related Stories: