உடுமலை அமராவதி அணை திறப்பு அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் வந்தது-விவசாயிகள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சி : நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 1,000 கன அடி உபரிநீர், கொத்தப்பாளையம் தடுப்பணையை கடந்து கரூர் நோக்கி செல்கிறது.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம், 4,047 மில்லியன் கனஅடி மொத்த கொள்ளளவு உள்ளது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 17,000 ஏக்கருக்கு மேல் பாசனம் நடக்கிறது.

அரவக்குறிச்சி வட்டத்தில் கொத்தப்பாளையம், சின்னதாராபுரம், ராஜபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் அமராவதி பாசன விவசாயிகள் தற்போது 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல், வாழை, மஞ்சள் போன்ற பணப்பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.தற்போது அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, சின்னாறு உள்ளிட்ட கிளை நதிகளில் இருந்து அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 90 அடி கொள்ளளவு உள்ளது. இதனால் அமராவதி அனையின் நீர்மட்டம் 88 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி அமராவதிக்கு வரும் 1,000 கனஅடி தண்ணீர் அப்படியே அமராவதி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கருர் மாவட்ட எல்லையான அரவக்குறிச்சி கொத்தப்பாளயம் தடுப்பணையை கடந்து கரூர் நோக்கி செல்கிறது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமராவதி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: