கொடைக்கானலில் கனமழை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் கயிறு கட்டி மீட்பு

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை அப்பகுதி மக்கள் கயிறு கட்டி மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக, கொடைக்கானல் - பழநி செல்லும் பகுதியில் உள்ள பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த காட்டாற்று வெள்ளத்தில் கொடைக்கானல் பேத்துப்பாறை அடுத்த வயல் பகுதியில் விவசாய பணிகளுக்கு சென்ற சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கினர். அங்கிருந்து வெளியே வர முடியாமல் பல மணி நேரம் தவித்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள், அவர்களை கயிறு கட்டி ஆபத்தான முறையில் மீட்டனர். இப்பகுதியில் கனமழை பெய்தால், இதுபோன்று அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். எனவே, இப்பகுதியில் உரிய பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக கொடைக்கானல் ஏரி நிரம்பியது. மேலும் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

எனவே, ஏரியின் கரைப்பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: