செல்போன் நிறுவன ஊழியர் போல் பேசி தமாகா பிரமுகர் மனைவியிடம் ரூ.1.73 லட்சம் நூதன திருட்டு

ஆலந்தூர்: மூவரசன்பட்டு, ராகவா நகர், 3வது தெருவில் வசித்து வருபவர் குருமூர்த்தி. ஆலந்தூர் தெற்கு பகுதி தமாகா தலைவரான இவர், தனது மகளின் திருமண செலவிற்காக, கடந்த 23ம் தேதி தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து தனது மனைவி புஷ்பா பெயரில் கடன் பெற்றுள்ளார். இந்த பணத்தை மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், ‘நான் செல்போன் நிறுன ஊழியர் பேசுகிறேன். உங்களது சிம்கார்டு சேவை முடிந்து, தொடர்பு துண்டிக்கப்பட உள்ளது.

எனவே, தொடர்ந்து சேவையை பெற புதுப்பிக்க வேண்டும். எனவே, உங்கள் ஆதார் எண், முகவரி, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கூறுங்கள்,’ என கேட்டுள்ளார். அதை நம்பிய அவரும், விவரங்களை தெரிவித்துள்ளார். பிறகு அவருக்கு வந்த ஓடிபி நம்பரையும் அந்த நபரிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் புஷ்பாவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 518 எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் நேற்று புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி  போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த மர்ம  ஆசாமியை தேடி வருகின்றனர்.

Related Stories: