பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு 16 லட்சம் தடுப்பூசி: பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு பின், மூடப்பட்ட பள்ளி, கல்லுாரிகள், வரும், 1ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து, ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, இந்த மாத ஒதுக்கீட்டில், 16 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பலர், தேர்தலின்போதும், மற்ற நேரங்களிலும் தடுப்பூசி போட்டிருக்கலாம். தடுப்பூசி போடாமல் இருப்பவர்களும் உள்ளனர். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து, அதற்காக, 16 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு கூடுதலாக தமிழகத்திற்கு வழங்குகிறது. இதன் வாயிலாக, தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அவர்கள் குடும்பத்தினர் கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்படும்.

இப்பணிகள், ஓரிரு நாட்களில் துவங்கப்படும். மேலும், நீண்ட நாட்களுக்குபின், ஐதரபாத்தில் இருந்து, 4 லட்சத்து 71 ஆயிரத்து 560 கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் வாயிலாக சென்னைக்கு வந்தன. அதேபோல், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து, 1 லட்சத்து 3,780 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்துள்ளன.

Related Stories: