நெமிலி அருகே அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்-அகற்றப்படாத கொரோனா வார்டால் சிக்கல்

நெமிலி : நெமிலி அருகே உள்ள அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. ஆனால், கல்லூரியில் உள்ள கொரோனா வார்டை அகற்றாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கத்தில்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் பாமா கூறியதாவது:

அரசு விதிமுறைகளை பின்பற்றி தொலைபேசி வாயிலாக மாணவர்களுக்கு முதற்கட்ட சேர்க்கை நடைபெறுகிறது. நேற்று காலை 9 மணி முதல் நடைபெறும் கலந்தாய்வில் சிறப்பு ஒதுக்கீட்டுக்குரிய மாணவ- மாணவிகள் என்சிசி, முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் விளையாட்டு சாதனையாளர்கள் மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்டு சிறப்பு ஒதுக்கீட்டாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (25ம் தேதி) காலை 9 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பிஎஸ்சி கணிதம், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ வகுப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் கலந்து கொள்கின்றனர். 26ம்தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், சிஏ, பிபிஏ படிப்புக்கு விண்ணப்பம் செய்த மாணவ- மாணவிகள் 80 மதிப்பெண்களுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

முதல்கட்ட மாணவர் சேர்க்கைக்கு 1:2 விகிதாச்சாரம் அடிப்படையில் தகுதியுள்ள மாணவ- மாணவிகளுக்கு முறையே தகவல் அனுப்பியுள்ளதால் தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம்   தகவல் கிடைத்த மாணவ- மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் அனைத்து உரிமைச்சான்றிதழ் சேர்க்கை கட்டணம் உள்ளிட்டவற்றுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் பாமா தெரிவித்தார். இதற்கிடையில் இக்கல்லூரியில் கடந்த சில மாதங்களுக்கு முன் 120 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.

இங்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு வருகிறது,  ஆனால், இக்கல்லூரியில் உள்ள படுக்கைகள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் ஆங்காங்கே மாஸ்க் மற்றும் ஏராளமான குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொரோனா வார்டு அகற்றப்படாத நிலையில் தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக சிகிச்சை மையத்தை அகற்றி தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

வாலாஜா: வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான மாணவிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. முன்னதாக ஆன்லைன் மூலமாக 4,199 மாணவிகள் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு பாடவாரியாக கலந்தாய்வு நேற்றுமுன்தினம் தொடங்கியது. முதல் நாள் விளையாட்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து நேற்று பிகாம், பிஏ, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கா. பரமேஸ்வரி தலைமையில் பேராசிரியைகள் குழுவினர்கள் மாணவிகளின் சான்றிதழை சரிபார்த்தனர். வரும் 27ம் தேதி கலந்தாய் முடிவடைகிறது. மீண்டும் 2வது கலந்தாய்வு வரும் 31ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடைபெறும் என கல்லுரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: