வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சிக்கினர்

புழல்: வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை செல்லும் வெளிவட்ட சாலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சில வாலிபர்கள் பந்தயம் கட்டி பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் குமரேசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம்  மாலை அப்பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கும்முனூர் சாலையில் 2 வாலிபர்கள் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மின்னல் வேகத்தில் பைக்கில் சென்றனர்.

அவர்களை, போலீசார் ரோந்து வாகனத்தில்  பின்தொடர்ந்து சென்று  மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், வில்லிவாக்கத்தை சேர்ந்த ராபர்ட் (18), குருவாயல் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (20) என்பதும், இவர்கள், வண்டலூர் - மீஞ்சூர்   வெளிவட்ட சாலையில் அடிக்கடி பைக் ரேஸில் ஈடுபட்டு வந்ததும்  தெரியவந்தது. அவர்களிடமிருந்து அதிவேக பைக்குகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

அடிக்கடி நடக்கிறது

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `சென்னையின் பிரதான சாலைகளில் இதுபோன்ற பைக் ரேஸ்கள் அடிக்கடி நடைபெறுகிறது. அதிவேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிள்களால் நிதானமாக செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அனைத்து சாலைகளிலும் அதிவேகமாக செல்லும் பைக்குகளை போக்குவரத்து போலீசார் கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டும்,’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: