பாணாவரம் அருகே தண்ணீர் வற்றியதால் ஏரியில் இறங்கி மீன்களை பிடித்த கிராம மக்கள்: பெரிய மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி

பாணாவரம்:  பாணாவரம் அருகே ஏரியில் தண்ணீர் வற்றியதால், கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி மீன்களை பிடித்து சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள கூத்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெடலவாடி ஏரியில் கடந்த பருவ மழையின் போது ஓரளவுக்கு நீர் நிரம்பியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏரி பாசனத்தில் விவசாயம் செய்து வந்தனர். தற்போது ஏரி வற்றி 3 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் உள்ளது.இந்நிலையில் நேற்று ஏரியில் பெரிய அளவிலான மீன்கள் தண்ணீருக்கு மேலே வந்து சென்று கொண்டிருந்தது.

இதைப்பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஏரியில் இறங்கி மீன்களை பிடித்தனர். அப்போது 10 கிலோ எடையில் ஒரு மீன் சிக்கியது. மேலும் பலர் 7 கிலோ, 5 கிலோ அளவில் மீன்களை பிடித்தனர். இந்த தகவல் சுற்றுப்புற கிராமங்களில் காட்டுத்தீயாய் பரவியது. இதனால் ஏரியில் குவிந்த 100க்கும் மேற்பட்டோர் மீன்களை பிடிக்க தொடங்கினர். ஏரியில் குறைந்தளவே தண்ணீர் இருந்ததால், பலர் ஏராளமான மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் கோணிப்பைகளில் நிரப்பி சென்றனர்.இதற்கிடையில் அதிகளவில் மீன்கள் கிடைத்த மகிழ்ச்சியில் சிலர் திடீர் வியாபாரிகளாக மாறினர். ஏரியில் சிக்கிய மீன்களை கிலோ ₹200 வரை விற்பனை செய்தனர். இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: