ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு: குண்டுமல்லி கிலோ 2,000க்கு விற்பனை

ஓசூர்:  வரலட்சுமி நோன்பு எதிரொலியாக ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது. குண்டுமல்லி கிலோ 2 ஆயிரத்துக்கும், கனகாம்பரம் கிலோ 1,600க்கும் விற்பனையானது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.நாடு முழுவதும் இன்று(20ம் ேததி) வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. ஓசூர் பகுதியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிக அளவில் இருப்பதால், இங்கு வரலட்சுமி நோன்பு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஓசூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வரலட்சுமி நோன்பு விற்பனையை எதிர்நோக்கி விளைவித்த பூக்களை நேற்று மார்க்கெட்டில் குவித்தனர். பெங்களூரு, சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வரலட்சுமி நோன்பு விற்பனைக்காக பூக்களை வாங்க ஓசூரில் குவிந்தனர். இதனால் பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.

தேவை அதிகரித்ததால் மார்க்கெட்டில் விலை அதிகரித்தது. கடந்த வாரம் கனகாம்பரம் கிலோ 240க்கு விற்றது நேற்று 1,600க்கும், குண்டுமல்லி 240க்கு விற்பனையானது 2 ஆயிரத்துக்கும், சாமந்திப்பூ 80ல் இருந்து 200க்கும், முல்லை 150ல் இருந்து 800ஆகவும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், தேவை காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். அதேபோல் அலங்கார பூக்களின் விலையும் அதிகரித்தது. வரலட்சுமி நோன்புக்கு தேவையான  ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம், இலை, விரலி மஞ்சள் உள்ளிட்டவையும் விலை அதிகரித்து. விற்பனை அமோகமாக நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: