காஞ்சிபுரம் பெருநகராட்சியில் நவீனமயமாக்கப்படும் பாதாள சாக்கடை திட்டம்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் தீவிரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெருநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை நவீனமயமாக்கும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, அதற்கான அறிக்கை தயார் செய்து அதிகாரிகள், அரசுக்கு அனுப்பியுள்ளனர். காஞ்சிபுரம் நகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். கடந்த 1975ம் ஆண்டு, காஞ்சிபுரம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. இதைதொடர்ந்து, 9 எம்எல்டி கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர், மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, புதிய குடியிருப்பு பகுதிகள் அதிகமாயின. தொடர்ந்து, கடந்த 2004ம் ஆண்டு ரூ.12.59 கோடியில் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, 26.2 கிமீ நீளத்துக்கு வடிகால் இணைப்பு புதைக்கபட்டு, வார்டு பகுதியில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துவதற்காகவும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பாதாள சாக்கடை அமைப்பை புனரமைக்கவும், கடந்த 2009ம் ஆண்டு, ரூ.17.06 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்தன. தொடர்ந்து, கடந்த 2011 ம் ஆண்டு  காஞ்சிபுரம் நகராட்சியை ஒட்டியுள்ள ஓரிக்கை, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை ஆகிய ஊராட்சிகளும், செவிலிமேடு பேரூராட்சி ஆகியவை இணைக்கப்பட்டு, 41 வார்டுகளாக இருந்த காஞ்சிபுரம் நகராட்சியில் 51 வார்டுகளாக அதிகரித்தது. இதையொட்டி, பெருநகராட்சியாக தரம் உயர்த்தபட்டது. தற்போது, காஞ்சிபுரம் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தற்போதைய மக்கள் தொகையி பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிக்கு, பாதாள சாக்கடை இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தினால், தற்போது நகராட்சியில் புதிதாக ஏராளமான நகர் பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகிவிட்டன. ஆனால் 1975ம் ஆண்டு அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு முறை, பழங்கால முறையில்  இன்றளவும் பயன்படுத்தபடுகிறது. இதனால், நகராட்சி பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு, சுத்திகரிப்பு இயந்திரங்கள் பழுது உள்பட பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற கடும் சவால்களை நகராட்சி நிர்வாகம் எதிர்கொண்டு வருகிறது.

குறிப்பாக மழை காலங்களில், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன் கழிவுநீர் ெவளியேறி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சாலையில் குளம்போல் கழிவுநீருடன் மழைநீரும் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன், சுகாதார சீர்கேடு உருவாகி, பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்பட பல போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அந்த நேரத்தில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது புகார் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை நவீனபடுத்த வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், சமூக ஆர்வலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்தனர். ஆனால் அரசு எவ்வித வளர்ச்சி பணியும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

நடைமுறை படுத்தாமல் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தினால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வந்தனர். இதையடுத்து கடந்த  2017ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் ரூ.248.26 கோடியில் நவீன சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் தேக்கி வைக்கும் கிணறு, புதிய குழாய்கள் புதைப்பு மற்றும் புதிய இயந்திரம் ஆகியவற்றை மாற்றி அமைப்பதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த போதிய நிதி இல்லை என கடந்த அதிமுக அரசு கைவிரித்து விட்டது. இந்தவேளையில், தேர்தலுக்கு முன்பு திமுக சார்பில் நடந்த பிரசாரத்தின்போது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் பெருநகராட்சியில் நவீன பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த பின்னர், காஞ்சிபுரம் நகராட்சி பிரச்னைகள் குறித்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. தொடர்ந்து காஞ்சிபுரம் பெரு நகரட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை நவீனபடுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முழுமையான திட்ட அறிக்கை தயாரித்து, அதனை கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டத்துக்கு விரைவில் தமிழக அரசு அனுமதி வழங்கும் என காஞ்சிபுரம் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

Related Stories: