நெல்லை சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதியில் பஸ்நிறுத்தம் எப்போது?.. போக்குவரத்து நெரிசலால் ரயிலை தவறவிடும் பயணிகள்

நெல்லை: நெல்லை சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதியில் பஸ்நிறுத்தம் அமைக்கும் பணி தொடங்கப்படாததால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் தொலைதூர ரயில்களை பயணிகள் தவறவிடும் நிலை ஏற்படுகிறது. நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்ேவறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நெல்லை கொக்கிரகுளம் பாலம் மற்றும் அதன் தொடர்ச்சியாக உள்ள பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதல் பாலம் கட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாலம் தொடங்கும் மற்றும் முடியும் இடங்களில் உள்ள சாலைப்பகுதிகளும் விரிவாக்கம் செய்யும்பணி நடந்தது. இதன்படி ெகாக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை அருகே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் அருகே உள்ள சிறிய பாலம் அருகே மற்றொரு சிறிய பாலம் கட்டப்பட்டது. இதனால் பயணியர் விடுதிக்கு செல்லும் சாலை வரை போக்குவரத்து ஓரளவு சீராகியுள்ளது. அதே நேரத்தில் பாலத்தின் மற்றொரு பகுதியான தேவர் சிலை அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அங்கிருந்த கடைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இந்தப்பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து சாலையோரத்தில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இடிக்கப்பட்ட பகுதிகள் தற்ேபாதுவரை அப்படியே உள்ளன. இதனால் இதன் அருகே தற்போது செயல்படும் தற்காலிக பஸ்நிறுத்தத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளன. இதனால் பாளையில் இருந்து சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் தேங்கி விடுகின்றன.

இப்பகுதியை கடந்து ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் ரயில்களை தவறவிடும் நிலை ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் மாலை நேரத்தில் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் சாலை விரிவாக்கம் செய்து பஸ் நிறுத்தம் இந்தப்பகுதியில் மாற்றியமைக்கவேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: