நேற்று முழுவதும் ஒரு பதிவு கூட வெளியாகவில்லை ராகுலின் டிவிட்டர் முடக்கம் நீக்கப்பட்டதா? இல்லையா? காங்கிரசார், பின்தொடர்வோர் குழப்பம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கை மீண்டும் செயல்பட டிவிட்டர் நிர்வாகம் அனுமதித்துள்ள போதிலும், அது இன்னும் செயல்படாமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சமீபத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவருடைய பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவர்களுடைய புகைப்படத்தை  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து, அவருடைய டிவிட்டர் கணக்கை  டிவிட்டர் நிர்வாகம் முடக்கியது. மேலும், காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட 5 ஆயிரம் காங்கிரசாரின் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் இந்த கணக்குகளை டிவிட்டர் நிர்வாகம் மீண்டும் செயல்பட அனுமதித்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கில் பதிவுகள் வெளியாகி வருகிறது. ஆனால், ராகுல் காந்தியின் கணக்கு செயல்பட அனுமதிக்கப்பட்ட போதிலும், நேற்று முழுவதும் அவருடைய கணக்கில் எந்த பதிவுகளும் வெளியாகவில்லை. ‘சாரே ஜகான் செ அச்சா... இந்துஸ்தான் ஹமாரா... சுதந்திர தினம்’ என்று அவர் வெளியிட்ட பதிவு, இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டுமே வெளியானது. டிவிட்டரில் வெளியாகவில்லை. இது, காங்கிரசாரை மட்டுமின்றி அவரை பின்தொடரும் மக்களையும் குழப்பி உள்ளது. இதனால், அவருடைய டிவிட்டர் கணக்கின் முடக்கம் நீக்கப்பட்டதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: