லேப்ராஸ்கோபி சிகிச்சை முறையில் நோயாளிக்கு புற்றுநோய் கட்டி அகற்றம்: ராயப்பேட்டை அரசு மருத்துவர்கள் சாதனை

சென்னை: சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் மீரா (50). இவரது பித்தக்குழாயும், கணையமும் இணையும் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியால், இரண்டு மாதமாக மஞ்சள் காமலை  நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இங்கு இரைப்பை, குடல், கல்லீரல், கணையம் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனிவாசன் தலைமையிலான டாக்டர்கள் லேப்ராஸ்கோபி சிகிச்சை அறித்தனர். இதனால் அப்பெண் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ‘‘இந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தது. இதுபோன்ற நோயாளிகளுக்கு வயிற்றை கீறி 20 செ.மீ அளவு திறந்த அறுவை சிகிச்சை வாயிலாக இரைப்பையின் ஒரு பகுதி சிறுகுடலின் ஒரு பகுதி கணையத்தின் ஒரு பகுதி பித்தக்குழாய் ஆகியவை அகற்றப்படும். மேலும், இச்சிகிச்சை பல்வேறு சிக்கல்களை கொண்டது. இந்நோயாளிக்கு நவீன விசைத்துளை வாயிலாக வயிற்றில் ஆறு இடங்களில் ஒரு செ.மீ அல்லது அரை செ.மீ அளவுக்கு துளையிட்டு புற்றுநோய் கட்டி பிரித்தெடுக்கப்பட்டு 5 செ.மீ அளவுக்கு துளையிட்டு கட்டி வெளியே எடுக்கப்பட்டது.

 இதனால் நோயாளிக்கு ரத்தம் வீணாவது போன்றவை தடுக்கப்பட்டு ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பினார்’’ என்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மணி கூறுகையில், ‘‘தனியார் மருத்துவமனைகளில் லேப்ராஸ்கோப்பி சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில், இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு அப்பெண்ணிற்கு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்திக் ெகாடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’’ என்றார்.

Related Stories: