ஹைதி நிலநடுக்கத்தில் 765 பேர் பலி: வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டம்; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்

போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து 765 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் வரை காயமடைந்துள்ளனர். கரீபியன் நாடான ஹைதியில் நிலையற்ற அரசியல் தன்மை, அதிபர் கொலை செய்யப்பட்டது, வறுமை மற்றும் கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் மிக சிரமமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.2 புள்ளிகளாக பதிவானது. தலைநகர் போர்ட் ஆப் பிரின்சில் இருந்து 125 கிமீ தொலைவில் இதன் மையம் இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினார்கள். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 765 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஆயிரம் பேர் வரை காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக பொறுப்பு பிரதமர் ஏரியல் ஹென்றி, நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். மேலும், சேத விவரம் குறித்து முழுமையாக தெரியாத நிலையில் சர்வதேச உதவியை கேட்க போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். இந்நாட்டில் கடந்த 2010ல் ஏற்பட்ட பூகம்பத்தில் 3 லட்சம் பேர் பலியாகினர்.

Related Stories: