இங்கிலாந்து 392 ரன் குவித்து 27 ரன் முன்னிலை; ஜோ ரூட் இன்னும் உச்சம் தொடுவார்: ஜானி பேர்ஸ்டோ பேட்டி

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்த முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 126.1 ஓவரில் 364 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 129, ரோகித்சர்மா 83, விராட் கோஹ்லி 42, ஜடேஜா 40 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து  அணியில் ரோரி பர்ன்ஸ் (49), சிப்லி (11) ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஹமீது டக்அவுட் ஆனார். 2வது நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன் எடுத்திருந்தது ரூட் 48, ஜானி பேர்ஸ்டோ 6 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 3வது நாளான நேற்று இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடிக்க உணவு இடைவேளை வரை இவர்களின் விக்கெட்டை இந்தியாவால் எடுக்க முடியவில்லை. இருவரும் 4வது விக்கெட்டிற்கு 121 ரன் சேர்த்த நிலையில், பேர்ஸ்டோ 57 ரன்னில் சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதம் விளாசினார். டெஸ்ட்டில் இது அவருக்கு 22 சதமாகும்.

மறுபுறம் ஜோஸ் பட்லர் 23, மொயின் அலி 27, சாம்கரன் 0, ராபின்சன் 6, மார்க்வுட் 5 ரன்னில் அவுட் ஆகினர். கடைசி விக்கெட்டாக ஆண்டர்சன் டக்அவுட் ஆனார். 128 ஓவரில் 391 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 180 ரன்னில் (321 பந்து, 18 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் முகமது சிராஜ் 4, இசாந்த்சர்மா 3, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினார்.  இங்கிலாந்து 27 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது. இன்று நாள் முழுவதும் தாக்குப்பிடித்து ஆடினால் தான் டிராவில் முடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இந்தியா சிக்கி உள்ளது.

நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இங்கிலாந்து துணை கேப்டன் பேர்ஸ்டோ கூறியதாவது: ஜோ ரூட் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 27 ரன்கள் முன்னிலை பெற்றதில் மகிழ்ச்சி. ஜோ ரூட் தனது சிறப்பான வடிவத்தில் இருந்தும் இன்னும் சிறப்பாக வர முடியும். அவருக்கு வயது 30 தான். அவர் இன்னும் உச்சத்திற்கு வருவார், என்றார்.

மைதானத்தில் புகுந்து  ரசிகர் காமெடி

நேற்று ஆட்டம் நடந்த போது இந்திய ஜெர்சி அணிந்த ரசிகர் மைதானத்தில் புகுந்தார். ஜெர்சியில் ஜாவ்ரோ என பெயர் எழுதி இருந்தார். காவலர்கள் அவரை வெளியேற்ற முயன்ற போது பிசிசிஐ சிம்பிளை காட்டிய அவர், இந்திய அணிக்காக ஆட வந்துள்ளதாக தெரிவித்து பீல்டிங்கை செட் செய்து கைதாட்டினார். இதைக் கண்ட இந்திய வீரர்கள்மற்றும் ரசிகர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் மைதானத்தில் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: