நெல் கொள்முதல் விலை உயர்வு மூலம் விவசாயிகள் கூடுதல் பயன்பெறுவர்: வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி பேட்டி

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர் வேளாண் துறையை வேளாண்மை உழவர்கள் நலத்துறை என்று ஆணையிட்டது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் 70 சதவீதத்திற்கு மேல் விவசாயத்தையே நம்பியுள்ள மக்களுக்கு தனியாக ஒரு வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிதிநிலை அறிக்கையில், எல்லா துறைகளுக்கும் சேர்ந்து மொத்தமாக ரூ.34,220 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வேளாண் துறை நிதிநிலை அறிக்கையின் முக்கியத்துவமாக தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டத்தின் படி விவசாயத்தின் பரப்பை அதிகரிப்பதாகும். இதேபோல், மானாவரி பயிர் மேம்பாடு, இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது, பாரம்பரியமிக்க தானிய வகைகளை பாதுகாப்பது, பனை மரத்திற்கு பாதுகாப்பு, இளைஞர்களை வேளாண் தொழிலில் ஊக்குவிப்பது மற்றும் விவசாய விளைபொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்ய சந்தை வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது போன்ற அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

2020-21ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை ஒப்பிட்டு பார்க்கும் போது ரூ.1,700 கோடி கூடுதலாகவும், இடைக்கால நிதிநிலை அறிக்கையை காட்டிலும் ரூ.900 கோடி கூடுதலாகவும் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மைக்கு ரூ.20 கோடி வரையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பனைமரம் நமது மாநில மரம் ஆகும். செங்கல் சூளைகளுக்கு இவை வெட்டப்படுவதாக மக்கள் மத்தியில் புகார் எழுந்தது. எனவே, கிராமப்புறங்களில் பனைமரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர்களிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும்.

நெல் கொள்முதலுக்கு மாநில அரசு சாதாரண ரகம் குவிண்டாலுக்கு ரூ.50 ரூபாயும், உயர் ரகம் ரூ.75ம் கொடுத்து வந்தோம். தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் சாதாரண ரகத்திற்கு 50 ரூபாயில் இருந்து ரூ.75 ஆகவும், உயர் ரகத்திற்கு (சன்னரகம்) ரூ.70ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் விவசாயிகள் கூடுதல் பயன் பெறுவார்கள். அரசு மானியங்களை குத்தகைதாரர்கள் பயன்படுத்துவது குறித்து வருங்காலங்களில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார். உடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இருந்தார்.

Related Stories: