ஓராண்டில் 500 கி.மீ பயணித்த 14 யானை கூட்டம்; ஊர் ஊராக சுற்றித்திரிந்தவர்கள் சொந்த ஊரு திரும்புறாங்க... 1.5 லட்சம் மக்களை வெளியேற்றிய சீன அரசு

பீஜிங்: கடந்த ஓராண்டாக கிட்டதிட்ட 500 கி.மீ தூரம் சுற்றித்திரிந்த யானை கூட்டம், தற்போது தங்களது சொந்த இடமான காப்புக் காட்டை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய விலங்குகள் காப்பகமான ஜிஷுவாங்பன்னாவில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 300 யானைகள் வசிக்கின்றன. அவற்றில் 14 யானைகள் அடங்கிய ஒரு கூட்டம் காப்புக்காட்டை விட்டு வெளியேறியதால், சர்வதேச ஊடகங்களில் கடந்த ஓராண்டாக தலைப்பு செய்திகளாக இடம்பெற்றுள்ளன. கிட்டதிட்ட 500 கிலோமீட்டர் அளவிற்கு இந்த யானைகள் பயணம் மேற்கொண்டுள்ளன.

சீன வனத்துறை அதிகாரிகள் இந்த 14 யானைகளை மீண்டும் காப்புக் காட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கவில்லை. ஆனால் அந்த 14 யானைகளும் செல்லும் வழித்தடங்களையும் ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தற்போது இந்த யானைகள், தங்களது பூர்விக வாழ்விடத்தின் நினைப்பு வந்துவிட்டதால், மீண்டும் ஜிஷுவாங்பன்னாவை நோக்கி படையெடுத்துள்ளன. ஊர் ஊராக சுற்றித்திரிந்த இந்த யானைகளுக்கு சீனாவில் விவிஐபி கவனிப்பு கொடுக்கப்படுகிறது அளிக்கப்படுகிறது. அதாவது, கடந்த ஓராண்டாக 25,000க்கும் மேற்பட்ட சீன காவல்துறையினர் யானைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் யானைகள் பயணிக்கும் சாலையை முன்கூட்டியே அறிந்து, பொதுமக்களை உஷார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஓராண்டில் பல்வேறு கிராமங்களில் இருந்து 1.50 லட்சம் மக்களை அவர்களது சொந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றி உள்ளனர். யானைகள் அந்த இடங்களை கடந்த பின்னர், மீண்டும் மக்கள் அவர்களது சொந்த இடத்திற்கு செல்கின்றனர். மேற்கண்ட 14 யானைகளும் வயல்களில் விளைந்துள்ள பயிர்களை உண்பதும், சேற்றில் குளிப்பதும், சோர்வாக இருக்கும்போது ஓய்வெடுப்பதும் என்று ஜாலியாக கூட்டமாக சுற்றித் திரிந்தன.

இதனால், கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வனத்துறை தெரிவித்தாலும் கூட, சர்வதேச கவனத்தை பெற்ற இந்த யானைக் கூட்டம் சாதாரண மனிதர் முதல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

Related Stories: