குலதெய்வம் கோயிலுக்கு சென்ற போது விபரீதம்!: தி.மலை மாவட்டம் ஆரணி அருகே காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒரே காரில் 7 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள் என 11 நபர்கள் வேலூர் விருபாச்சிபுரத்தில் இருந்து செங்கம் அருகே உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர். முனிவந்தாங்கள் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது காரின் முன் டையர் திடீரென வெடித்துள்ளது. இதன் காரணமாக கட்டுப்பாட்டினை இழந்த கார், எதிரே போரூரில் இருந்து சந்தவாசல் பகுதிக்கு நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 4 பெண்கள், ஒரு ஆண் மற்றும் 3 மாத குழந்தை என மொத்தமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். படுகாயம் அடைந்த 5 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்குமாரை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல் ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் விவரம் சரிவர தெரியவில்லை. சம்பவ இடத்தில் கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் மற்றும் சந்தவாசல் காவல் நிலைய போலீசார் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குலதெய்வம் கோயிலுக்கு சென்ற போது விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: