ஆக.25 விவசாயிகளை நேரில் சந்தித்து பேச்சு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை வரவேற்கிறோம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: ‘‘வருகிற 25ம் தேதி ஒருநாள் முழுவதும் விவசாயிகளை பாஜவினர் நேரில் சந்தித்து பேசுவார்கள்” என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த தமிழ் கையேடு வெளியீட்டு விழா தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை கையேட்டை வெளியிட்டார். விழாவில் பாஜ தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அண்ணாமலை அளித்த பேட்டி: வருகிற 25ம் தேதி ஒருநாள் முழுவதும் விவசாயிகளை சந்தித்து பாஜ பேச இருக்கிறது. உழவர்களுடன் ஒரு நாள் என்ற பெயரில் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் நிகழ்வாக இந்த  சந்திப்பு நடைபெறும். முன்னாள் அமைச்சர் இல்லங்களில் சோதனை தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே இந்த சோதனை தேவையானதா என தெரிய வரும். தமிழக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பது தவறில்லை. வரவேற்கிறோம். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு அரசின் திட்டங்கள் செயல்முறைகள் என்னென்ன என்பதை  பொறுத்து பாஜ கருத்து சொல்லும். வேளாண் சட்டம் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனர். விவசாயிகள் இந்த சட்டத்தை வரவேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். மேலும், அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் துரிதமாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ் 10.34 கோடி விவசாயிகளுக்கும், தமிழகத்தில் 38 லட்சம் விவசாயிகளுக்கும் ரூ.6000 வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: