கோவையில் 2 வது நாளாக தொடர்கிறது எஸ்.பி. வேலுமணியின் நண்பர் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு: எம்.சாண்ட் குவாரியில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

கோவை: அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு நிறுவனங்களில் நேற்று முன்தினம் மட்டும் 63 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கோவையில் மொத்தம் 42 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. நேற்று 2வது நாளாகவும் சோதனை நீடித்தது. இதேபோல், வேலுமணியின் நண்பர் சந்திரபிரகாஷுக்கு சொந்தமான நிறுவனங்களில் 2-வது நாளாக போலீசார் சோதனை நடத்தினர். சந்திரபிரகாஷின் கே.சி.பி. நிறுவனம் பீளமேட்டில் உள்ள அடுக்குமாடியின் 9-வது தளத்தில் உள்ளது.

இந்த சோதனையின்போது பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கோரி விண்ணப்பம் அனுப்பியது, ஒப்பந்தம் பெற்றது, தற்போது நடத்தி வரும் திட்டப்பணிகள் குறித்த ஆவணங்களை சேகரித்து விசாரித்தனர். மதுக்கரை பாலத்துறை அருகே கருஞ்சாமி கவுண்டம்பாளையம் பகுதியில் வி.எஸ்.ஐ. என்ற பெயரில் எம்.சாண்ட் குவாரி இருக்கிறது. இந்த குவாரியையும் சந்திரபிரகாஷ் நிர்வாகித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த குவாரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை, ஆதாரங்களை சேகரித்துள்ளனர். திருப்பூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள எம்.சாண்ட் குவாரியிலும் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

சந்திரபிரகாஷ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களில் பதிவாகியுள்ள பல்வேறு தகவல்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பாக அரசு துறைகளுக்கு அனுப்பிய டெண்டர் ஆவணங்களை கைப்பற்றி விசாரித்ததாக தெரிகிறது. சோதனை தொடர்ந்து நடப்பதால் வேறு ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ‘‘சோதனை தொடர்ந்து நடக்கிறது. இப்போதுள்ள நிலையில் என்ன ஆவணங்கள் கிடைத்திருக்கிறது என சொல்ல முடியாது. ஆனால், தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: