ஜார்கண்ட் மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்த மாணவிகள் மீது போலீசார் தடியடி

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 12-ம் வகுப்பு மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய கோரி அமைச்சரைச் சந்திக்க வந்த மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பத் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய கோரி தேர்வு எழுதிய மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்த முற்றுகை சம்பவத்தால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா இருப்பதை அறிந்த மாணவிகள் அவரை சந்தித்து பேச வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த அதிகாரிகள் மற்றும் போலீசார், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியதால், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைந்து போகச் செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளம் உள்ளிட்ட பல இடங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Related Stories: