மயிலாடும்பாறை கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் தள்ளுபடியில் ரூ.96.28 லட்சம் முறைகேடு: முன்னாள் தலைவர் கைது

தேனி: தேனி மாவட்டம், மயிலாடும்பாறை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016ல் பயிர் கடன் தள்ளுபடியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பெரியகுளம் மாவட்ட கூட்டுறவு அலுவலக துணை பதிவாளர் முத்துக்குமார், மதுரை மண்டல வணிக குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் நேற்று மயிலாடும்பாறை கூட்டுறவு சங்கத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில், கடந்த 2016ம் ஆண்டு 5 ஏக்கருக்கு குறைவாக பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களை மட்டுமே அரசு தள்ளுபடி என்று அறிவித்திருந்தது.

ஆனால் மயிலாடும்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 ஏக்கருக்கு மேலாக உள்ள 46 பெரிய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.96.28 லட்சம் முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முறைகேட்டிற்கு துணையாக இருந்த கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தர்மர்(55), செயலாளர் ஜெயமணி, கணக்காளர் வைரவன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தர்மரை, மதுரை மண்டல வணிக குற்றத்தடுப்பு புலனாய்வு போலீசார் நேற்று மயிலாடும்பாறையில் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: