‘‘தானா சேர்ந்த கூட்டம்’’ என்ற படத்தில் வரும் காட்சியைபோல் போலி ரெய்டு நடத்தி ரூ.6 லட்சம் பறித்த வழக்கில் சென்னை வருமானவரி ஊழியர் உள்பட 6 பேர் கைது

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் கண்ணன் என்கிற ஆட்டோ கண்ணன் (52). பைனான்ஸ் நடத்தி வரும் இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயலாளராகவும் உள்ளார். கடந்த மாதம் 30ம் தேதி ஒரு பெண் உட்பட 6 பேர் தங்களை ஐ.டி. அதிகாரிகள் எனக்கூறி கண்ணன் வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்திய அவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க தங்களுக்கு ரூ.6 லட்சம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளனர். இதனால், பயந்துபோன கண்ணன் ரூ.6 லட்சத்தை கொடுத்தார். ஓரிரு தினங்கள் கழித்து வருமான வரித்துறை அலுவலகம் சென்று கண்ணன் விசாரித்தபோது அவர்கள் போலியானவர்கள் என தெரிந்தது.

உடனே, கண்ணன் ஆற்காடு டவுன் போலீசில் 6ம் தேதி புகார் கொடுத்தார். இதையடுத்து, போலீசார் மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், ஆற்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 2ல் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர், ஒரு பெண் உட்பட 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கண்ணன் வீட்டில் ரெய்டு நடத்திய கும்பல் என தெரியவந்தது. இதையடுத்து, 6 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:- ஆற்காடு விநாயகர் தெருவை சேர்ந்தவர் எழிலரசு (40). இவர் பிரியாணி கடை வைத்துள்ளார். எழிலரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி செயலாளர் கண்ணனுக்கு சொந்தமான கட்டிடத்தில் கடையை வாடகைக்கு எடுத்து கார்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது கண்ணன் குறித்த அனைத்து விவரங்களும் எழிலரசுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து எழிலரசு, ஓட்டல் நடத்தி வந்த அவரது நண்பர் பாரத் ஆகிய இருவரும் ‘‘தானா சேர்ந்த கூட்டம்’’ என்ற சினிமா படத்தில் வருவதுபோல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கண்ணன் வீட்டில் ரெய்டு நடத்தி கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக எழிரலசு தனது நண்பரான சென்னையை சேர்ந்த மது (40) மூலம் ஆட்களை தயார் செய்துள்ளார். அதன்படி 30ம் தேதி ரெய்டு நடத்துவதுபோல ரூ.6 லட்சத்தை பறித்து சென்றுள்ளனர். இந்த கும்பலில் அதிகாரிகள் போல் நடித்த நரேன் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மீதி ரூ.4 லட்சத்தை எழிலரசுவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். மீதி ரூ.4 லட்சத்தை பங்கு போட்டபோது மாட்டிக் கொண்டனர். இதையடுத்து, எழிலரசு, பாரத், மது, சென்னை முத்துகுமாரசாமி தெருவை சேர்ந்த யாதவ் என்கிற ராமகிருஷ்ணயாதவ்(58), சென்னை ஜமாலியாவை சேர்ந்த சையத்கலீல் பைதுல்லா(33), சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த முபீனா(37) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், பைக், ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இவர்களில், ராமகிருஷ்ணா யாதவ், சென்னை வருமானவரித்துறை தலைமையிடத்தில் முதுநிலை உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: