வால்பாறை, ஆழியார் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை-அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

ஆனைமலை : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவதற்காக, சுற்றுலா பயணிகள் வால்பாறை மற்றும் ஆழியார்  பூங்கா செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோவை மாவட்டம்  பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா கட்டுக்குள்  வந்த நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால்,  தமிழக-கேரள எல்லையில் உள்ள கோவை மாவட்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார  பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக,  ஆனைமலையில் உள்ள வழிபாட்டுத் தலங்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள்  மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல, சுற்றுலா தலங்களை  மூடவும் மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  வால்பாறை செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் வனத்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் முகாம் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு  வருகின்றனர். விடுமுறை நாட்கள் என்பதால், வால்பாறைக்கு சுற்றுலா வரும்  வாகனங்களை தணிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர். ேநற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆழியார் மற்றும் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள்  வருகை அதிகளவில் இருந்தது.

அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகளிடம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே,  ஆழியார் பூங்கா மற்றும் அணைப்பகுதிக்கு செல்ல முடியாது என எடுத்துக் கூறி அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பினர். உரிய ஆவணங்களுடன் வரும் நபர்கள் மட்டுமே  வால்பாறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஆழியார்  பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடாத வண்ணம் காவல்துறை மற்றும்  சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது.

Related Stories: