பாலியல் வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜர்

விழுப்புரம்: பாலியல் வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராகியுள்ளார். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பணியில் இருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. பின்னர் அதுதொடர்பாக நீதிமன்றம் தானாகவே வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பின்னர் பிப்ரவரி 27ஆம் தேதி விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்த கண்ணன் ஆகிய இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விரைவாக முடிக்க அதாவது டிசம்பர் 20க்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தனர். கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி கோபிநாத் வரும் 9ஆம் தேதி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Related Stories: